கூட்டுறவு சங்கத் தேர்தல் தொடர்பாக தற்போதுள்ள நிலை தொடர வேண்டும் எனவும், வேட்புமனுக்களை வாங்கவோ, பரிசீலிக்கக் கூடாது எனவும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளயில் திமுக எம்.எல்.ஏ. சக்கரபாணி வழக்கு தொடர்ந்தார். கூட்டுறவு சங்கத் தேர்தல் முறையாக நடைபெறவில்லை என்றும், ஆளுங்கட்சியினருக்கு சாதகமாகவே தேர்தல் நடத்தப்படுவதாகவும், எம்.எல்.ஏ. சக்கரபாணி தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். கூட்டுறவு சங்கத் தேர்தலில் ஆளுங்கட்சியினர் மட்டுமே போட்டியிட அனுமதிக்கப்படுவதாகவும், எதிர்க்கட்சியினரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படுவதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது ஆகியோரின் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கு வேட்பு மனுக்களை வாங்கவோ, அவற்றை பரிசீலிக்கவோ கூடாது எனவும், தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
மேலும், தேர்தல் நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது என்றும், இதுவரை தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கு எத்தனை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன, அதில் எத்தனை மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுள்ளன என்பது குறித்தும் பதில் தர உத்தரவிட்டனர். இதுவரை தேர்தல் நடைபெற்ற இடங்களில் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலையும் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களுக்கான மாநில தேர்தல் ஆணையச் செயலாளர் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

No comments:
Post a Comment